Monday 22 June, 2009

திசையறியா நிலை

ஆரம்பப் பாட சாலையும், ஆசிரிய, ஆசிரியைகளும் எப்பொழுதுமே நம் நினைவில் தங்கி(விடும்; விடுவார்கள்).. மூன்றாம் வகுப்பிலோ அல்லது நான்காம் வகுப்பிலோ - ஒரு பாடம்.

பாட ஆரம்பத்தில் ஒரு சிறுவன் - அரை டிரௌசருடன், கைகளை - அம்பயர் WIDE சொல்வது போல் காட்டியபடி - நின்று கொண்டு, அவனருகே - என்ன காரணமோ - ஒரு சேவல் படமும் இருக்கும்.

பாடத்தின் பெயர் : திசைகள்.

சின்ன வயதில் - இந்த பாடம் என்னைக் குழப்பிய அளவிற்கு வேறு எதுவும் குழப்பியிருக்க முடியாது!

" சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"

இதில் ஏதும் குழப்பம் இல்லை.

நாம் தினமும் காலையில் எழுந்திருந்து, சூரியனைப் பார்த்தபடி நின்றோமானால், நம் முகத்துக்கு முன்னே இருப்பது கிழக்கு.

ஹும் .... சிறிய குழப்பம் ஆரம்பம்.

காலையில் பாயில் சுருண்டு படுத்திருந்தவனை - வனமாலினி (அக்கா) தண்ணீர் முகத்தில் தெளித்து, "இப்பொழுது எழுந்திருக்கவில்லை என்றால் - அடுத்தது ஒரு அண்டா தண்ணி வரும்" என்ற எச்சரிக்கையைக் கேட்டு, மருண்டு, உருண்டு எழுந்த பின், 'சூரியன் எங்கே?' - என்று கேட்க - அதை சரியாகக் கவனிக்காத அக்கா - 'எல்லாம் நீ ராத்திரி எங்கே வச்சியோ அங்கேதான் இருக்கும்' என்று சொல்வாள்.

சரி நாமே தேடிக் கண்டுபிடிப்போம் என்று துணிந்து வெளியே வந்து பார்த்தால் - வீட்டுக்கு முன்னே சட்டயப்பர் கோவில் மதிள் சுவர்தான் தொ¢யும். நம் புத்தகத்தில், "நாம் தினமும் காலையில் எழுந்திருந்து, சூரியனைப் பார்த்தபடி நின்றோமானால், நம் முகத்துக்கு முன்னே இருப்பது கிழக்கு" என்றுதானே போட்டுள்ளது; எழுந்திருந்தவுடன் சூரியனைப் பார்த்தபடி எப்படி நிற்பது?

வாசலுக்கு வரலாமா அல்லது கூடாதா? என்று மிகச் சிறிய சந்தேகங்கள்.

சரி - இந்த அற்ப சந்தேகங்கள் நிவர்த்தியானால் கூட -

சூரியனை நான் மதிள் சுவருக்கு அந்தப் பக்கம் ஸ்பாட் செய்து, அவருக்கு நேரே முகத்தை வைத்துக் கொள்ளும் பொழுது -

மேலும் சில சந்தேகங்கள். அவையாவன:

1) என் முகத்திற்கு நேரே இருப்பது கிழக்கு என்றால், காலுக்கு நேரே இருப்பது? கைகளுக்கு நேரே இருப்பது?

2) அதோ பக்கத்து வீட்டு தண்டு நிற்கிறானே - அவன் முகத்திற்கு முன்னே இருப்பது?

3) ஓரு வேளை - இந்த சட்டயப்பர் கோவில் சுவர்தான் கிழக்கோ?

KGS வந்து தலையில் ஒரு குட்டு வைத்தவுடன் - உழக்கு இரத்தம் வரும் முன்னே கிழக்கு முழுவதும் விளங்கிவிட்டது.

அடுத்த கட்டம்:

"நம் பின் பக்கம் இருப்பது மேற்கு"

ஆஹா - ஆரம்பிச்சுட்டான்யா - ஆரம்பிச்சுட்டான்....

மேலே கண்ட 1,2,3 கேள்விகளில், முகத்திற்கு பதில் முதுகும், சட்டயப்பர் கோவில் சுவருக்கு பதிலாக - கொல்லைப் பக்கத்து சுவரும், தண்டு விற்கு பதிலாக - நாகராஜ ஐயராத்து ஸ்ரீ ராமும் போட்டுக் கொள்ளுங்கள்.

என்னுடைய குழப்பங்கள் - உங்களுக்கும் வரும்.

இப்பொழுது நம் பின் பக்கம் இருக்கும் திசையைப் பார்க்க நம் முகத்தைத் திருப்பினால்,

கிழக்கு அங்கேயே இருக்குமா - அல்லது முகத்துக்கு எதிரே - அதுவும் திரும்பி - மேற்கைப் பார்க்கவிடாமல் செய்துவிடுமா?

அதையும் தவிர, தலை 180 டிகிரி திரும்பாதே!

K G Subramanian வருவதற்குள் விடை காண்பது அறிவு...

அதற்கும் அடுத்த கட்டம்:

நம் இடக்கைப் பக்கம் வடக்கு;

வலக்கைப் பக்கம் தெற்கு.

இந்த வாக்கியங்களை நான் எத்தனை முறைகள் கடம் அடித்தாலும்,

"நம் இடக்கைப் பக்கம் வலக்கு"

"வலக்கைப் பக்கம் இடக்கு"

"இலக்கைப் பக்கம் வலக்கு"

"வடக்கைப் பக்கம் இலக்கு"

என்றெல்லாம் - permutation's and combination's தான் வரும் - சரியாக வராது.

இவற்றுக்கும் மேலே சென்றால் - அது இன்னும் காமெடி!

"வடக்குக்கும் கிழக்குக்கும் நடுவே இருப்பது வடகிழக்கு"

ஏன் கிழ வடக்கு இல்லை?

"தெற்குக்கும் கிழக்குக்கும் நடுவில் இருப்பது தென்கிழக்கு"

ஏன் கிழ தெற்கு இல்லை?

Similarly -----

ஏன் மேல் தெற்கு இல்லை?

ஏன் மேல் வடக்கு இல்லை?

திசைகள் சுற்றிச் சுற்றி இப்படிக் குழப்புவதால்,

நமக்கு கிழக்கு மேற்கு மட்டுமே சுலபமாக விளங்குவதால்,

நான் கீழ்க் கண்ட 8 திசைகளை சிபாரிசு செய்கிறேன்:

1) கிழக்கு

2) மேற்கு

3) மேல் கிழக்கு

4) கிழ மேற்கு

5) மேல் கிழ கிழக்கு

6) கிழ கிழ மேற்கு

7) கிழ மேல் மேற்கு

8) மேல் மேல் கிழக்கு.

அன்புடன்

கௌதமன்.

No comments: