அந்த ஆரம்பப் பள்ளி நாட்கள்!
தேசிய ஆரம்ப பாட சாலை - ...குளம் வட கரை - நாகப்பட்டினம்.
முதல் வகுப்பு பற்றி பிறகு எழுதுகின்றேன்.
2 ஆம் வகுப்பு பற்றி இப்பொழுது எழுத நினைப்பது - என் முதல் பப்ளிக் அப்பியரன்ஸ் சம்பந்தமாக!
அந்த நாட்களில் - வகுப்புகளில் - நீள வாக்கில் வகுப்பின் இரு பக்கங்களிலும் 3 கால் பலகைகள் போடப் பட்டிருக்கும். ஒவ்வொரு பலகையும் 1' X 6' இருக்கும் என்று நினைக்கிறேன். சில வால் பையன் வகையறா - ஆசிரியர் இல்லாத அல்லது மாறும் நேரங்களில் - நடுக் காலின் மீது ஒருவன்அமர்ந்துகொண்டு - இரு ஓரங்களில் மேலும் 2 வால்கள் உட்கார்ந்து - வட்டமாக அந்த பலகைகளைச் சுழற்றி பேரின்பம் காண்பார்கள். வகுப்பாசிரியை அல்லது ஆசிரியர் வந்தவுடன் - இவர்களின் பெயர்கள் சிலேட்டில் மானிட்டரால் எழுதப் பட்டு - ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப் படும். ஆசிரியரின் mood க்குத் தகுந்தாற்போல் - அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
வகுப்பு ஆசிரியை லில்லி புஷ்பம் (வில்லி புஷ்பம் என்பது பொருத்தமாக இருந்திருக்குமோ என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது) வெள்ளை சேலை, வெள்ளை இரவிக்கை, வெள்ளை கூந்தல், சதுர முகம், கோதுமை நிறம் - இவற்றோடு - கூலிங் க்ளாஸ் அணிந்த இவரை - நாகையில் 1950 களில் யாரும் பார்த்திருக்கலாம். (என் தங்கைக்கு - அணிலே அணிலே - ஓடி வா - ஞாபகம் வரக்கூடும்) வகுப்பாசிரியையின் வெண்கலக் குரலைக் கேட்டே - எங்கள் சப்த நாடியும் அடங்கிவிடும். அந்த நாட்களில் - அண்ணாதுரை போல் எழுந்து நின்று ஓர் விரல் காட்டி நின்றால் - அதற்கு, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது போன்ற அனர்த்தங்கள் கிடையாது - இயற்கை அழைக்கிறது என்ற ஒரே அர்த்தம்தான்!
லில்லி புஷ்பம் டீச்சரிடம் - யாருமே விரலுயர்த்த மாட்டார்கள் - 90% of the time - அந்த டீச்சர் bad mood ல் தான் இருப்பார். மாணவிகளுக்கு மட்டும் பாசம் காட்டும் FCS. பையன் களை (அவர்கள் சக ஆசிரிய பெருமக்களின் ரத்தத்தின் ரத்தமானவர்களாக இல்லை என்றால்!) அவமானப் படுத்தும்படி கடுமையாகப் பேசி உட்கார வைத்து விடுவார். அதனால் உட்கார்ந்த இடத்திலேயே வடிவேலு செய்த மாணவர்கள் ஏராளம்.
எனக்கு வலது பக்கத்தில் 'தம்பி' என்று ஒரு பையன் - என் தம்பி அல்ல - யார் தம்பியோ அதுவும் தெரியாது. மிகவும் பயந்த சுபாவம்! பாவம்! - லில்லி வகுப்புகளில் - தம்பியினுடைய முகத்தில் திடீரென்று ஒரு uneasiness தோன்ற ஆரம்பிக்கும். விழிகள் பெரியதாக ஆரம்பிக்கும். அவனுடைய இடது கால் முட்டியால் டமால் என்று என் வலது முட்டியில் ஒரு இடி இடிப்பான்.
நான்: "என்னடா?"
அவன்: " 1 அடைக்குதுடா!"
நான்: "டீச்சர் கிட்ட கேளுடா"
அவன்: "கேட்டா விடுவாங்களாடா?"
நான்: "உம்..."அவன்: (மௌனம்)
3 நிமிடங்கள் - ஒன்றும் நிகழாது.
தம்பியினுடைய முகத்தில் மீண்டும் ஒரு uneasiness தோன்ற ஆரம்பிக்கும். விழிகள் பெரியதாக ஆரம்பிக்கும்.
அவனுடைய இடது கால் முட்டியால் டமால் என்று என் வலது முட்டியில் ஒரு இடி இடிப்பான்.
நான்: "என்னடா?"
அவன்: " 1 அடைக்குதுடா!"
நான்: "டீச்சர் கிட்ட கேளுடா"
அவன்: "கேட்டா விடுவாங்களாடா?"
நான்: "உம்..."
அவன்: (மௌனம்)
3 நிமிடங்கள் - ஒன்றும் நிகழாது.
என்றைக்காவது ஒரு நாள் அவன் கேட்டு, லில்லியும் அனுமதியளித்திருந்தால் - உடனே நானும் எழுந்து ஓர் விரல் காட்டலாம் என்று பார்த்தால் - அந்தத் தம்பி (மௌனப்) புரட்சிப் புயல் வைக்கோ போல புரட்சிப் பயல் சைக்கோ வாக - JJ வில்லியிடம் - வாலைச் சுற்றி வைத்துக் கொண்டு இருந்துவிட்டான்.ஒரே ஒரு முறை - நாலாங்கிளாஸ் சிண்டு வாத்தியாரின் உறவுப் பையனுக்கு அனுமதி கிடைத்தவுடன் - கிடு கிடு வென 7 அல்லது 8 பேர்கள் ஓர் விரல் உயர்த்தி வெற்றி நடை போட்டு வெளியேறினோம். உடனே தம்பிக்கும் வந்தது வீரம்! எழுந்தான், கேட்டான். அதற்குள் அந்த ஆசிரிய உறவுப் பையன் திரும்பி வந்து விட்டான் - எனவே லில்லி கூறினார் - " ஒரு ஆடு 1 போனால் ஒன்பது ஆடுகளும் போகணுமா? ச்சீ - உட்காருடா".
மதிய உணவு முடித்து எல்லோரும் வகுப்புக்கு வந்தவுடன், மதிய முதல் வகுப்பு - எப்பொழுதுமே - லில்லி வகுப்புதான். ஒவ்வொருவராகக் கூர்ந்து கவனிப்பார். எந்தப் பையங்களின் டிராயர் பாக்கெட் எல்லாம் - phenomenal ஆக இருக்கிறதோ அவர்களை அழைத்து table அருகே நிற்க வைத்து - ஒரு பார்வை பார்ப்பார் - அதற்குப் படியாவிட்டால் - பிரம்பைக் கையில் எடுத்து - அல்லது எடுப்பது போல் ஓர் ஆக்க்ஷன்! - அவ்வளவுதான் - பையன் கள் - வேக வேகமாக இரண்டு கைகளாலும் மாறி மாறி - பாக்கெட்களைக் காலி செய்து - வேர்க்கடலை, பர்ஃபி, இலந்தப் பழம், இலந்த வத்தல், (ஒரு பையன் ஒரு முறை இலந்தப் பாகு என்கிற வஸ்துவையும் - பாக்கெட்டில் ஊற்றிக் கொண்டு வந்திருந்தான்!) இத்யாதி இத்யாதி - மேஜை மீது குடியேறும்.
"நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன் - வெளியே விற்கின்ற பண்டங்கள் எல்லாம் வாங்கக் கூடாதுன்னு?" என்று கூறி, சிலருக்கு அடிகளும் கொடுத்து, கடுமையான எச்ச்ரிக்கைகளுக்குப் பின், "போ - போய் உட்கார்" என்று அனுப்பி வைப்பார்.
இதற்குப் பிறகு நடந்ததுதான் - என் வாழ் நாளில் நான் பெற்ற மிகப் பெரிய அனுபவப் பாடம். மேஜை மீது வைக்கப்பட்ட எல்லா திண்பண்டங்களும் ஒவ்வொன்றாக லில்லியின் வாய் வழியாக - தொப்பையை அடையும். "ச்சீ புளிக்குது; ஆஹா - நல்லா இருக்கு" என்பது போன்ற விமரிசனங்களுடன்!
இந்த லில்லி டீச்சரின் இன்னொரு பொழுது போக்கு என்ன என்றால் - மாணவ / மாணவிகளுக்கு மனக் கணக்கு போடுதல். அந்த நாள் தொடங்கி, ஐந்து வருடங்களுக்கு (அதாவது 7 ஆம் கிளாஸ் படிக்கும் பொழுது எமரால்டில் - என்ன - இது கூடத் தெரியலயா - என்று எக்யம் உக்கிரமாகப் பார்த்து பெரிய குரலில் பயமுறுத்திக் கொண்டிருந்த நாள் வரை) எனக்கும் கணக்கு ஒரு பிணக்குதான். கணக்கைப் பொருத்த வரையில் நான் ஒரு புண்ணாக்குதான் - இப்பொழுதுதான் ஏதோ excel தயவால் - பங்கு மார்க்கெட்டில் மெத்தமாக் 79 ஆயிரம் நஷ்டத்துடன் - 3 மாதம் முன் 119 ஆயிரமாக இருந்தது - தலை நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு இருக்கிறேன்............. நின்றால் தலை சுற்றுமே!
...எங்கே விட்டேன்? - ஆம் - லில்லி மனக்கணக்கு.
கால்குலேட்டர் பற்றி எல்லாம் தெரியாத முண்டம் ஒன்றுதான் இந்த மனக்கணக்கு என்னும் கொடிய விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். (அந்த காலத்தில் கால்குலேட்டர் என்ற வார்த்தையே கண்டு பிடிக்கப்படவில்லை - நான் முதன் முதலாக் ஒரு கால்குலேட்டரை தொட்டுப் பார்த்ததே 1974ல் தான்) கணக்கு என்னவோ இப்பொழுது யோசித்துப் பார்க்கையில் அவ்வளவு பெரியதாகத் தோன்றவில்லை - ஆனால் - ஐந்தும் மூன்றும் எவ்வளவு போன்ற பெரிய பெரிய கணக்குகளை, எப்படி இந்த சக மாணவர்கள் போடுகிறார்கள் என்று நான் அதிசயித்துப் போவேன்! (2 ஆம் கிளாஸ் படிக்கும் பொழுது எனக்கு - serious infection marked by intestinal inflammation and ulceration; caused by Salmonella typhosa ingested with food or water -வந்ததால் - அதாவது டைபாயிட் வந்ததால் - நான் ஸ்கூல் செல்வது பெரிதும் தடைபட்டுப் போனது - டைபாயிட் வந்தாலும் சரி, வீட்டிற்கு ஊரிலிருந்து உறவினர்கள் வந்தாலும் சரி - நான் ஸ்கூலுக்கு மட்டம் போடுவேன் - அல்லது போடப்படுவேன்) இந்த லாங்க் லீவு சமயத்தில்தான் ஆசிரியர்கள் சதி செய்து கணக்குப் பாடத்தின் முக்கிய பல அயிட்டங்களை சக மாணவர்களுக்கு போதித்திருப்பார்கள் என்று நான் சந்தேகிக்கிறேன்!லீல்லியின் மனக் கணக்கு வகுப்பில் மேலும் ஒரு பயங்கரமான அமசம் என்ன என்றால் - அவர் கணக்கு கொடுப்பார். 1 நிமிடம் நேரம் தருவார்; யாரும் பேசக்கூடாது; சிலேட்டை எடு! எடுப்போம். "எழுது" எழுதுவார்கள் (நான் - யோசித்துக் கொண்டிருக்கையிலேயே - "கீழே வை") - நான் அவசர அவசரமாக போர்டில் கண்ணுக்கு படுகின்ற எண்ணையோ அல்லது யாராவ்து சொல்லிக் கொண்டே எழுதுகிற எண்ணையோ - அல்லது முருகனை நினைத்துக் கொண்டே ஒரு எண்ணையோ எழுதி வைப்பேன். டீச்சர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருப்பார். பையன் கள் ஒவ்வொருவராக போய் சிலேட்டைக் காட்ட வேண்டும். ஜயலலிதா 2 முட்டை போட்டார்; கருணாநிதி 3 முட்டை போட்டார் - ஹூம் இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் - லில்லி எனக்கு அந்த காலத்திலேயே 10 முட்டைகளுக்குக் குறைவில்லாமல் போட்டிருக்கிறார்! - அது மட்டுமா - நான் தயக்கமாக அவரை நோக்கி நடக்க ஆரம்பிக்கையில் - "டேய் - திருவாரூர் தேர் அசைந்து வருதுடா" - என்று சொல்லுவார் - எலோரும் 'கொல்' என்று சிரிப்பார்கள்!!
எனவே - நண்பர்களே - நான் 10 / 20 பேருக்கு முன் public appearance ஆனதும் பிரபலம் ஆனதும் 2 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதுதான் - நன்றி கூற வேண்டியது லில்லி புஷ்பம் டீச்சருக்குத்தான்!